வியாழன், 14 மார்ச், 2013

இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கேட்டு தமிழக மாணவர்களின் போராட்டம்


இலங்கையில் நடந்தது இனப் படுகொலை என்று அறிவிக்கக் கூறியும், ராஜபட்சே போர்க் குற்றவாளி என்று அறிவித்து சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தக் கூறியும் தமிழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்கள்.

தமிழகத்தில், பல வருடங்களாக , எந்த ஒரு உயிர் போகிற பொதுப் பிரச்சினைக்கும் வெளியில் வந்து போராடாத மாணவர்கள் இன்று போராட்டம் என்று இறங்கி இருப்பது பாராட்டுதலுக்கு உரியது.

அரசியல் கட்சிகளை ஒதுக்கி பொது மக்களின் ஆதரவை பெற்று இப் போராட்டத்தை அடுத்த நிலைக்கு எடுத்து செல்வதே எங்கள் நோக்கம் என்கிறார்கள் மாணவர்கள்.
இதற்கே ஒரு தனி 'சபாஷ்' கூறலாம்.

ஆனால்...
மாணவர்கள் கையில் எடுத்திருக்கும் பிரச்சினை சாதாரணமானது அல்ல.

அரசியல் என்பதன் பால பாடம் தெரியாத , அரசியல் பார்வை என்பதை முற்றிலுமாக ஒதுக்கிய பாடத் திட்டங்களை படித்து வளர்ந்த மாணவர்கள் இதை எப்படி கையாளப் போகிறார்கள் ?
தமிழகத்தின் திராவிட அரசியல் தான் மாணவர்கள் பார்த்து வளர்ந்த அரசியல். அது சீரழிந்த அரசியல். அதனை அடித்தளமாக வைத்தும் இந்த பிரச்சினையை அணுக முடியாது.

மாணவர்கள் செய்ய நினைத்தாலும் அதை சரி வர செய்யமுடியாமல் இருப்பதற்கு, அவர்களை சரியான வகையில் தயார்படுத்தாத கல்வி முறைகள் ஒரு மிகப் பெரிய காரணம்.

மாநில அளவிலான அரசியலே தெரியாத நிலையில், மாநிலங்களுக்கு இடையிலான அரசியல் மற்றும் மத்திய அரசியல், அனைத்து மாநிலங்களையும் இணைத்த இந்திய அரசியல் , இவற்றை தாண்டிய அண்டை நாடுகளுடனான வெளியுறவு அரசியல், உலக அரசியல், புவி சார் அரசியல், etc என்று பலப் பல இருக்கின்றன. இவற்றைப் பற்றிய அடிப்படை புரிதல் இல்லாமல், ஈழப் பிரச்சினை பேச முடியாது
இதை மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறதா நம் கல்வி முறை?
இல்லை என்றே சொல்ல வேண்டும் .

படிக்காத அரசியலை, மாணவர்கள் , பார்த்து, தெரிந்து கற்றுக் கொள்வதற்கு  தலைவர்கள் இருக்கிறார்களா? அவர்களின் சரியான வழிகாட்டுதல்கள் இருக்கிறதா  என்றால் அதற்கும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்திய மாநிலங்களை, இந்தியா என்ற ஒரு குடையின் கீழ் உணர்வு பூர்வமாக  இணைத்திருப்பது காந்தியும், நேதாஜியும், விடுதலைப் போராட்ட வரலாறுக்கு 65 வயதே ஆகி இருப்பதுவும், தேசிய கீதமும் தான் .

மற்றபடி,

இந்தியாவின் federal setup - ல் , மொழிவாரி மாநிலங்கள்அந்தந்த  மண்சார்ந்த பிரச்சினைகள், மொழி சார்ந்த பிரச்சினைகள், கலாச்சாரம் சார்ந்த பிரச்சினைகள், வித்தியாசமான அணுகுமுறைகள் என்று பலவற்றால் உள்ளபூர்வமாக பிரிந்து கிடக்கின்றன

இலங்கைப் பிரச்சினையை எடுத்துக் கொண்டால் , வட மாநிலத்தவருக்கு அதன் முழு சாரம் தெரியவில்லை. புரிவதும் இல்லை. இந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் பிரச்சினை என்றே பார்க்கப் படுகிறது. அதே போல , தமிழர்களில் எத்தனை பேருக்கு காஷ்மீர் பிரச்சினையின் ஆழம் தெரியும் ? வட கிழக்கு மாநிலங்களின் பிரச்சினை புரியும் ? என்ற கேள்வியும் எழுகிறது.
இந்த இடைவெளியை இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப் படவேண்டும். அதற்கான காலமும், அவசரமும், அவசியமும் வந்துவிட்டது.

மாநில மொழி செய்திதாள்கள் அந்தந்த மாநில செய்திகளுக்கே முக்கியத்துவம் தருகின்றன. அது தவிர டெல்லி செய்திகளும், மத்திய அரசு செய்திகளும் சிறிதாக இடம் பெறுகின்றன.

ஆங்கில செய்திதாள்கள் விகிதாசாரத்தில் சற்றே வித்தியாசம் காட்டி செய்திகள் வெளியிடுகின்றன.

காட்சி ஊடகங்களும் இதே நிலை தான்.

அண்டை மாநிலங்கள், பிற மாநிலங்கள், அனைத்து மாநிலங்கள் என்று அங்கு நடக்கும் விஷயங்கள் , அரசியல், நிர்வாகம் குறித்த செய்திகள் , மக்களுக்கு தெளிவாகஎல்லா நாட்களும் கிடைக்கும் வகையில் ஊடகங்கள் தருவதில்லை.

சுருங்கச் சொன்னால் , ஏதாவது பரபரப்பு செய்தியாக இருந்தாலொழியஅண்டை மாநிலமான கேரளாவிலோ, கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ என்ன நடக்கிறது என்பதை தமிழர்கள் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பு இல்லைஅன்றாட தொடர்பு நிலை முற்றிலுமாக அற்றுப் போன நிலை தான்.
இன்றைய இன்டர்நெட் யுகத்திலும், அதை பயன்படுத்துபவர்கள் மிகக் குறைவே.

மொழி வாரியாக தனித் தனி தீவாக பிரிந்து கிடக்கும் மக்களுக்கு இடையில்  உணர்வு பூர்வமான, உள்ள பூர்வமான பற்றுதலும், சக உணர்வும் ஏற்படுவதற்கு அன்றாட செய்தி பரிமாறல்கள் அத்தியாவசியமான ஒன்று.

120 கோடி என்பது மிகப் பலம் வாய்ந்த, உலகின் பல சரித்திரங்களை மாற்றி அமைக்கக் கூடிய மக்கள் சக்தி. ஆனால், சொந்த நாட்டிற்குள்ளேயே , உணர்வாலும், உள்ளத்தாலும் இணைக்கும் இணைப்புப் பாலம் இல்லாமல் பிரிந்து , விழலுக்கு இறைத்த நீராய் இருக்கிறது இந்த மாபெரும் மக்கள் சக்தி.
உணர்வாலும், உள்ளாதாலும் இணைந்திருக்க வேண்டியதன் அவசியம் .., மாணவர்கள் தங்களின்  இந்த போராட்டத்திற்கு வழிகாட்டுவதற்கு இங்குள்ள தலைவர்களை ஒதுக்கிய நிலையில், சுய பலன் இல்லாத , பிற மாநிலத்தை சேர்ந்தவர்களின் வழிகாட்டுதல்கள் கிடைத்திருக்க கூடும் என்பது தான்.

அமெரிக்கா , ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், தேர்தல் நடைபெறும்போது , அதன் ஆரம்பக் கட்டப் பணிகள்முதல் , தனிப் பட்ட முறையில் வேட்பாளர்களின் பிரசார வியுகம் எப்படி அமைய வேண்டும் , அதற்கான அறிக்கை தயாரிப்பு , ஊடகங்களை பயன்படுத்துவது , இன்ன பிற தேர்தல் களப் பணிகள் போன்றவற்றில் மாணவர்கள் ஈடுபடுத்தப் படுகிறார்கள். நேரிடையாக ஈடுபடுவதால், தேர்தல் அரசியல், அதன் பின் வரும் அதிகார அரசியல் போன்றவற்றை முழுமையாக அதில் ஈடுபட்டு தெரிந்து கொள்ளும் வாய்ப்பு மாணவர்களுக்கு ஏற்படுகிறது .

இத்தகைய வாய்ப்புகள் இந்திய மாணவர்களுக்கு இல்லை.
அரசியலைமுற்றிலுமாக நீக்கிய பாடத்திட்டங்களும், செயல்முறை பங்களிப்புக்கான வாய்ப்புகளும் இல்லாமல், வழிகாட்டுதலுக்கான தலைவர்களும் இல்லாத இன்றைய இந்திய மாணவர்கள் தான் நாளை இந்தியாவை ஆளப் போகிறவர்கள் !!

கல்வியாளர்கள், அரசு, தேர்தல் ஆணையம் , சமூக ஆர்வலர்கள் என்று அனைத்து தரப்பிலும் இது குறித்து சிந்தித்து , தேவையான மாற்றங்களை கொண்டுவருவது மிகவும் அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக