வியாழன், 14 மார்ச், 2013

கருத்து சுதந்திரம்


கருத்து சுதந்திரம் குறித்து பல்வேறு தளங்களில் பல்வேறு வகையான விவாதங்கள் வெட்டியும், ஒட்டியும் நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றன.

அடிப்படையில் கருத்து சுதந்திரம் எனபது என்ன? அதற்கு  வரைமுறைகள் இருக்கிறதா? அதற்கான நெறிமுறைகள் அவசியமா?

நமது இந்தியா ஒரு பன்முகத் தன்மை வாய்ந்த நாடு. மதம், மொழி, இனம், நிறம் என பல வேறுபாடுகள், கலாச்சாரங்கள்.

மொழியை வைத்து எப்போது மாநிலங்கள் பிரிக்கப்பட்டதோ அப்போதே  இந்தியார்கள் என்ற பார்வையை விடுத்து, மக்கள் மாநிலங்கள் அளவில் அது சார்ந்த மொழி அளவில் சுருங்கிவிட்டனர்.

அந்தந்த மாநிலங்களின் மண் சார்ந்த பிரச்சினைகள், மொழி, கலாசாரம், பழக்க வழக்கங்களை அடிப்படையாக கொண்டு உருவெடுக்கும் பிரச்சினைகள் என்று ஒவ்வொரு கருத்திற்கும், அது சார்ந்த பிரச்சினைக்கும் தனி தனி அடயாளங்கள் உண்டு.

இதனால் ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான ஒரே கருத்தாக்கம் என்பது ஏற்படமுடியாமலும், ஏற்புடையதாக இல்லாமலும் இருக்கிறது.

இந்த நிலையில், ஒரு மாநிலத்தவருக்கு ஏற்புடையதாக இருக்கும் ஒரு விஷயம் இன்னொரு மாநிலத்தவருக்கு ஏற்புடையதாக இருப்பதில்லை.

ஒட்டு மொத்த சமுதாயத்திற்கான, நாட்டிற்கான சட்டங்கள் பொதுவானதாக இருந்தாலும், மதம் என்று வரும்போதுதிருமணங்கள், விவாகரத்துகள், சொத்துரிமை , சடங்குகள், சம்பிரதாயங்கள் என்பவை மதங்களை அடிப்படையாக வைத்ததாகவே இருக்கின்றன.

இது போன்ற ஏகப்பட்ட நடைமுறை சிக்கல்கள் இருக்கும் நாட்டில்  கருத்தொற்றுமை என்பது சற்று சிரமம். அதிலும், மதம் சார்ந்த விஷயங்களிலோ, ஒழுக்கம் சார்ந்த விஷயங்களிலோ மாநிலத்திற்கு மாநிலம் வேறு வேறு நிலைப்பாடுகள். இதனாலேயே ஒரு மாநிலத்தில் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளப் படும் ஒரு விஷயம் இன்னொரு மாநிலத்தில் மிகப் பெரிய சமூக போராட்டத்திற்கோ, எதிர்ப்புக்கோ காரணமாகிறது.

ஆக கருத்து சுதந்திரம் என்பது அவரவர் பிரச்சினை என்று வரும்போது மட்டும் ஒரு வரம்புக்குள்ளக வைத்துப் பார்க்கப்படுவதும்  தங்களை பாதிக்காத பிற விஷயங்களில் எல்லையற்ற கருத்து சுதந்திரத்திற்காக வாதடுவதும் நம் நாட்டில் வாடிக்கையாக நடக்கும் வேடிக்கை.

சமூகப் பிரச்சினைகளில் தான் கருத்து சுதந்திரம் இப்படி என்றால், நடைமுறை வாழ்க்கையில், சாதாரண விஷயங்களில்  கருத்து சுதந்திரம் பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை என்பது தான் விடையாக இருக்கிறது.

இந்தியாவில் பெரும்பான்மையான் திருமணங்கள் ஏற்பாட்டுத் திருமணங்கள் தான். இவற்றுக்கும் ஒரு தெளிவான வியாபார ஒப்பந்தத்திற்கும் வித்தியாசம் என்பதே இல்லை எனலாம். திருமணதிற்கு முக்கியமான காதல், விருப்பம் போன்ற கருத்து சுதந்திரங்களுக்கு அங்கு இடம் இல்லை. இதை பெரும்பான்மையான் மக்களும் கேள்வி இன்றி ஏற்றுக் கொள்ளப் பழக்கப் பட்டிருக்கிறார்கள்.

இதில் எங்கிருக்கிறது கருத்து சுதந்திரம் ?

இத்தகைய திருமணங்கள் ஒரு உதாரணம் தான். இது போல பல அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில், கருத்து சுதந்திரம் என்ற எண்ணமே இல்லாமல் , அதன் தேவை பற்றிய நினைப்பு கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தான் கருத்து சுதந்திரம் பற்றிய கூச்சலும் போடத் தயங்குவதில்லை.

முதலில் இத்தகைய நிஜங்களை மாற்றுவோம். சொந்தமாக யோசித்து தீர்மானமான முடிவுகளை எடுக்கும் திறமையை மக்கள் அனைவரும் பெறவேண்டும். இது நடந்து விட்டாலே , நிழலில் கருத்து சுதந்திரம் தன்னாலே காப்பாற்றப் பட்டு விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக